search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் மதுக்கடை"

    • பொதுமக்களுடன் சேர்ந்து அருள் எம்.எல்.ஏ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் மது கடைக்கு வந்தனர்.
    • மதுக்கடையை மூடுவதற்கான கெடு முடிந்து விட்டதாகவும், தொடர்ந்து நாளையில் இருந்து மதுக்கடையை திறக்க கூடாது என அரசு மதுபான கடை ஊழியரிடம் கூறினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 10 ஆண்டு காலமாக அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடை ஊரின் மத்தியில் அமைந்துள்ளதால் இந்த பகுதியில் குடியிருப்பு வாசிகள் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    தொடர்ந்து 10 ஆண்டு காலம் போராடியும் அரசு மதுபான கடையை மூட முடியாமல் இருந்தது. எனவே இந்த கடையை மூட கோரி கடந்த மாதம் சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்பொழுது போலீசார் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் கடையை அகற்ற ஒரு மாத காலம் அவகாசம் கேட்டது.

    கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. உட்பட அனைவரும் கலைந்து சென்றனர். அவகாசம் கேட்டு ஒரு மாத காலம் முடிந்தும் இதுவரை மதுக்கடையை மூடவும் அல்லது வேறு இடத்தில் மாற்றவோ டாஸ்மாக் நிர்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து டாஸ்மாக் கடையை மூடுவதற்கான வழிமுறைகள் குறித்து அருள் எம்.எல்.ஏ. தலைமையில் முத்துநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை ஆகிய கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆலோசனை ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து பொதுமக்களுடன் சேர்ந்து அருள் எம்.எல்.ஏ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் அனைவரும் மது கடைக்கு வந்தனர். மதுக்கடையை மூடுவதற்கான கெடு முடிந்து விட்டதாகவும், தொடர்ந்து நாளையில் இருந்து மதுக்கடையை திறக்க கூடாது என அரசு மதுபான கடை ஊழியரிடம் கூறினர். மேலும் அங்கு இருந்த டாஸ்மாக் ஊழியரின் காலில் திடீரென விழுந்த சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அருள் தயவு செய்து கடையை மூடுங்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

    இதை சற்றும் எதிர்பாராத கடை ஊழியர்கள் பதறினர். பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். எம்.எல்.ஏ.வின் போராட்டம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை மதுக்கடை மூடப்பட்டது. கடை முன்பாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறும் பொழுது மூடப்பட்ட மதுக்கடையில் உள்ள மதுபானங்களை வேறு பகுதிக்கு கொண்டு செல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். சர்சைக்குரிய மதுக்கடை மூடப்பட்டதால், அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×